search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம் விபத்து"

    ராஜபாளையத்தில் அட்டைப்பெட்டி ஏற்றி வந்த லாரி மோதியதில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சன்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஜய்குமார் (வயது 17). சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் அஜய்குமார் சத்திரப்பட்டி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பழைய பஸ் நிலையம் அருகே ஊரணி பட்டி தெரு விலக்கில் அஜய்குமார் சென்றபோது, கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அட்டைப்பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது.

    அந்த லாரி எதிர்பாராத விதமாக அஜய்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பலியான மாணவர் அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்துக்கு காரணமான அம்பையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவர், லாரி மோதி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ராஜபாளையத்தில் இன்று காலை சரக்கு லாரி மரத்தில் மோதி வாலிபர் உடல் நசுங்கி பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 25). இவர் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் எண்ணை நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு தென்காசிக்கு சரவணக்குமார் புறப்பட் டார்.

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கே சென்றது.

    இதன் மீது மோதாமல் இருப்பதற்காக சரவணக்குமார் லாரியை லேசாக திருப்பினார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து ரோட்டோர பனைமரம் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சரவணக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயங்களுடன் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு மணிநேரம் போராடி லாரியில் சிக்கி இருந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர்.

    இதேபோல் ராஜபாளையம் எம்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44). தனியார் பஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த இவர், சம்பவத்தன்று தனது மகன் மிதுல் தனஷ்கருடன் (11) மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    சங்கரன்கோவில் ரோடு, இந்திரா நகர் விலக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பன்னீர்செல்வம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டுச் சென்றது.

    இதில் பன்னீர்செல்வம், மிதுல் தனஷ்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மிதுல் தனஷ்கர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே சாரம் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 31). இவர் கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்த அவர் மதியம் சாப்பிடுவதற்காக கீழே இறங்கினார்.

    அப்போது ஆபிரகாம் எதிர்பாராத விதமாக கால் இடறி சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அபிரகாம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆபிரகாம் மனைவி புஷ்பவள்ளி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ராஜபாளையம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மேட்டுவடகரையைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது30). இவர் முரம்பில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். கருப்பசாமியின் தந்தை ஆறுமுகம் (58). இவர் சிமெண்டு கடை வியாபாரத்தை கவனித்து வந்தார்.

    நேற்று மதியம் ஆறுமுகம் கடை அருகே ராஜபாளையம்- நெல்லை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஆறுமுகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

    உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. #accidentcase

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தென்மலை மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 36) இவர் நைட்டி தைத்து தளவாய்புரத்துக்கு சென்று கொடுப்பார். வழக்கம் போல் தைத்து வைத்திருந்த நைட்டிகளை கொடுக்க ராஜபாளையத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டார். அவருடன் உறவினர் குரு கணேஷ் (21) என்பவரும் சென்றார். ஆட்டோவை முனியாண்டி (25) என்பவர் ஓட்டிச் சென்றார். வேகமாகச் சென்ற ஆட்டோ இனாம்கோவில்பட்டி திருப்பத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த குரு கணேஷ், முனியாண்டி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #accidentcase

    ×